பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு முன்னேற்றம்!
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு முன்னேறினார்.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. எனினும், தங்கமோ, வெள்ளியோ கைப்பற்றவில்லை.
இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் தொடக்க சுற்றில் இந்திய வீரரான அமன் ஷெராவத், மாசிடோனியா வீரரான விளாடிமிர் எகோரோவ் உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட அமன் ஷெராவத் முதல் பாதியில் 5-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார். தொடர்ந்து அவர் ஆதிக்கம் நீடிக்கவே 10-0 என்ற கணக்கில் விளாடிமிர் எகோராவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் அமன்.