விமானத்தில் 3 வயது குழந்தைக்கு வழங்கப்பட்ட பொருள்... கடும் கோபமடைந்த பெற்றோர்!
வோங் (முழு பெயர் தெரியவில்லை) என்பவர் தனது கணவர் மற்றும் 3வயது குழந்தையுடன் ஹாங்காங்கிலிருந்து லண்டனுக்கு கேத்தே பசிபிக் ஏர்வேஸ் விமானத்தில் சென்றுக்கொண்டிருந்தனர். வணிக வகுப்பில் பயணித்த இவர்களுக்கு விமானப் பணிப்பெண் இரவு உணவு வழங்கினார். அவர்களின் 3 வயது குழந்தை சிக்கனும், தண்ணீரும் சாப்பிட்டார். பின்னர் அந்த குழந்தைக்கு தண்ணீர் போன்ற பானம் வழங்கப்பட்டது. ஒரு சிப் குடித்த பிறகு, அது புளிப்பு சுவையாக இருப்பதாக குழந்தை தனது பெற்றோரிடம் கூறினார்.
இதையும் படியுங்கள் : Lollipop ஆர்டர் செய்த சிறுவன்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.. காரணம் என்ன?
பின்னர் அதனை குழந்தையின் பெற்றோர்கள் அருந்தியபோது, அது வெள்ளை ஒயின் என்பதை உணர்ந்தனர். இதனால் கடும் கோபமடைந்த பெற்றோர்கள் விமானப் பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த பணிப்பெண் மன்னிப்பு கோரினார். பின்னர் அவர்கள் மற்றொரு மூத்த குழு உறுப்பினரை அழைத்து இதுகுறித்து புகாரளித்தனர். மேலும், விமானத்தில் உள்ள மருத்துவ ஆலோசனை சேவையைத் தொடர்பு கொண்டார். விமானத்தில் இருந்த ஒரு பிரெஞ்சு மருத்துவர் குழந்தையைப் பரிசோதித்து, அவர் நலமாக இருப்பதாகக் கூறினார். இச்சம்பவம் குறித்து வோங் இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "விமான பணிப்பெண் தன் தவறுக்கு எங்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தாலும், அது சம்பவம் குறித்த சரியான காரணத்தை எங்களுக்கு வழங்கவில்லை. மேலும் இதுபோன்று மீண்டும் நிகழாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரிக்கவும் இல்லை. குழந்தையின் டிக்கெட்டின் பணத்தை திருப்பித் தரவும், மூன்று வவுச்சர்களை வழங்கவும், இது தொடர்பான எந்தவொரு மருத்துவ பரிசோதனைகளுக்கும் பணம் செலுத்தவும் விமான நிறுவனம் முன்வந்தது" என தெரிவித்திருந்தார்.