தாக்கப்பட்டதாக பொய் புகார் அளிப்பதா? உ.பி. பெண் துறவி மீது வழக்குப்பதிவு!
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் துறவி மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சப்ரா பதக். இவர் தனது தந்தை மற்றும்
சகோதரருடன் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி அயோத்தியிலிருந்து
ராமேஸ்வரம் வரை 4,000 கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, பெண் துறவி சப்ரா பதக் பரமக்குடியில் வெள்ளிக்கிழமை இரவு தங்கி மறுநாள் காலை வழக்கம் போல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சில மர்ம நபர்கள் தன்னை வழிமறித்து காரில் இருந்த ராமர் கொடியை உடைத்து தனது காரை சேதப்படுத்தி தன்னையும் தாக்கியதாக புகைப்படங்களை வெளியிட்டார். இது தொடர்பாக சனிக்கிழமை மாலை புகார் ஒன்றை பரமக்குடி தாலுகா காவல் அளித்திருந்தார்.
இதையடுத்து பரமக்குடி டிஎஸ்பி உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு
சனிக்கிழமை இரவு வரை சப்ரா பதக் யாத்திரை மேற்கொண்ட பகுதிகளில்
பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததுடன் சப்ரா
பதக் தாக்கப்பட்டதாக சொல்லபடும் இடங்களுக்கு அவரை அழைத்து சென்று
விசாரித்தனர்.
ஆனால் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உண்மையை தெரிந்து கொள்வதற்காக தொடர்ந்து நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது பரமக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்யாண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் சப்ரா பதக்கின் சகோதரர் சாலையில் உள்ள கற்களை சேகரித்து காருக்குள் வைக்கும் காட்சி பதிவாகி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த வீடியோவை கைப்பற்றிய போலீசார் வீடியோவின் அடிப்படையில் பெண் துறவியிடம்
அந்த வீடியோவை காட்டி விசாரித்தனர். அப்போது பெண் துறவி சப்ரா பதக் அவரது தந்தை சைலேஷ் பதக் மற்றும் சகோதர அன்கிட் பதக் மூவரும்
அளித்த புகார் மனுவில் கூறிய சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்று கூறினர். இதனையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பியதாக குற்றச்சாட்டி மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.
ஏன் இவ்வாறு அந்தப் பெண் துறவி நடந்து கொண்டார் என்பது குறித்து தொடர்ந்து
பெண் துறவியுடன் தொடர்பிலிருந்த உள்ளூர் அமைப்புகளிடம் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.