#Paralympics போட்டி - பதக்கத்தை உறுதி செய்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி!
பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8ஆம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. பாராலிம்பிக்ஸில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் 5வது நாளான நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் 30.01 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக பிரீத்தி பால் பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலம் வென்றார். பிரீத்தி பால் தனது இரண்டாவது வெண்கலத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தினார்.
இந்த சூழலில், பாரிஸ் பாராலிம்பிக்கில் ஆடவர் உயரம் தாண்டுதலில் டி-47 போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இது இந்தியா பெற்ற 7 வது பதக்கமாகும். பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதங்களை பெற்றுள்ளது.
இந்த நிலையில் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் பதக்கத்தை உறுதிசெய்தார். பேட்மிண்டன் SU5 பிரிவின் அரையிறுதிப் போட்டியில் மணிஷா ராமதாஸை எதிர்கொண்ட அவர் 23-21, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்கும் மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.