தேர்தல் நடத்தை விதிகளால் களையிழந்த பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ரமலானை முன்னிட்டு நடைபெற்ற பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் வியாபாரம் சரிவர நடைபெறாமல் களையிழந்து காணப்பட்டது.
ரமலான் பண்டிகை அடுத்த வாரம் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், ரமலான் பண்டிகை கொண்டாடுவதற்காக பல்வேறு ஆயத்தப் பணிகளில் இஸ்லாமிய பெருமக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ரமலான் பண்டிகையின் போது பிரியாணி சமைத்து உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்தளிப்பதற்காக தற்போது முதலே இஸ்லாமிய பெருமக்கள் ஆடுகளை வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் விற்பனையானது அமோகமாக இருக்கும் என வியாபாரிகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். ஆனால், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளால், பணப்புழக்கமானது குறைவாக உள்ளது. இதனால் ஏராளமான வெளியூர் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்க முன்வராததால் இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையானது களையிழந்து காணப்பட்டது.
ரமலான் பண்டிகை காலங்களில் வழக்கமாக இந்த ஆட்டுச் சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாவது வழக்கம். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தினால் ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்க வராததால், பிரபலமான பாவூர்சத்திரம் ஆட்டுச்சந்தையானது களையிழந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.