டெல்லியில் ரூ.23 லட்சத்துக்கு விற்பனையான பேன்சி கார் பதிவு எண்!
டெல்லியில் வாகனங்களுக்கான பேன்சி பதிவு எண் பெறுவதற்கு நடத்தப்படும் ஏலத்தில் 0001 என்ற எண் ரூ.23.4 லட்சத்திற்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் வாங்குவது பலரது கனவாக இருந்தாலும் அதிலும் காரின் நம்பர் பேன்சியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். வாகனங்களின் அடையாள எண்களை எளிய முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் பேன்சி நம்பர்கள் போக்குவரத்து துறை சார்பில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகையிலான பேன்சி நம்பர்கள் தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.
வாகனங்களுக்கான பேன்சி பதிவு எண்களை பெறுவதற்கு போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது. குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பதிவு எண்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும், மற்ற எண்களுக்கு வாரா வாரமும் ஏலம் நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் ஏல நடைமுறை, 2014 முதல் அமலில் உள்ளது.
டெல்லி போக்குவரத்து துறை கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை நடத்திய ஏலத்தில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் விரும்பும் 0001 என்ற பதிவு எண்ணுக்கு மார்ச் மாதம் ஏலம் நடத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலையாக ரூ.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில், இந்த எண் கடும் போட்டிகளுக்கு இடையே ரூ.23.4 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த ஏலம் எடுத்த நபரின் விவரம் வெளியிடவில்லை. கடந்த ஜூன் மாதத்தில் 0009 என்ற பதிவு எண் ரூ.11 லட்சத்துக்கும், 0007 என்ற பதிவு எண் ஜனவரி மாதத்தில் ரூ.10.8 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.