For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
11:22 AM Apr 05, 2025 IST | Web Editor
பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Advertisement

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். அதன்படி பழனி திருஆவினன்குடியில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement

சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு காலை 11 மணியளவில் கோயில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானை சமேதர் மற்றும் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்ரல் 10ம் தேதியும், பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏழாம் நாள் திருவிழாவான வருகிற ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து ஏப்ரல் 14ம் தேதி கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவடைகிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பாதயாத்திரையாக வந்து பழனிஆண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் முதல் நாளான இன்று காசி, கயா, திரிவேணி சங்கமம், கொடுமுடி ஆகிய ஊர்களில் இருந்து கங்கை, யமுனை, சரஸ்வதி மற்றும் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தங்கள் கொண்டுவந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோயில் நிர்வாகம் மற்றும்‌ மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழுவினர், இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
Advertisement