பங்குனி உத்திர ஆராட்டு விழா... சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!
கேரளாவில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். கார்த்திகை மாதம் தான் அதிக பக்தர்கள் சென்று திரும்புவார்கள் என்ற போதிலும் மற்ற காலங்களிலும் அங்குக் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்.
இந்த சூழலில், சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று (ஏப்.1) திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு நாளை (ஏப்.2) கொடியேற்றம் நடைபெற உள்ளது. தொடர்ந்து சித்திரை விஷு பண்டிகையும் வருவதால் கோயில் நடை, தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
அதன்படி, ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்படும் நிலையில், ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும்.
பின்னர், வைகாசி மாத பூஜைக்காக மே 14 ஆம் தேதி திறக்கப்பட்டு, மே 19 ஆம் தேதி நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.