திண்டுக்கல்லில் கோலாகலம்: இயேசுவின் வரலாற்றை சித்தரிக்கும் பாஸ்கா திருவிழா!
திண்டுக்கல்லில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாஸ்கா திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் காட்சி அனைவரையும் உருக்கியது.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 96 பட்டிகளின் தாய் கிராமமாக விளங்கக்கூடிய திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தின் 333ம் ஆண்டு பாஸ்கா திருவிழா பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முதல் நாள் பாஸ்கா திருவிழாவில் இயேசுவின் வாழ்க்கை வரலாறுகளை சித்தரிக்கும் விதமாக அந்தந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் உடைகள் அணிந்து நடித்த காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இறுதியில் இயேசு கல்வாரி மலையிலே சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காட்சியும் தொடர்ந்து இயேசுவின் திரு உடலானது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தூம்பாவில் வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான இறைமக்கள் கையிலே மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து இன்று (ஏப். 6) பாஸ்கு நள்ளிரவில் இயேசு உயிர்த்தெழும் காட்சி நடைபெற உள்ளது. நாளை (ஏப். 7) காலை 12 தேரில் உயிர்தெழுந்த இயேசு இறை மக்களுக்கு ஆசீர் வழங்கும் விதமாக நகரின் முக்கிய வீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெற உள்ளது.