பாம்பன் பாலம் திறப்பு எப்போது? - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
டெல்லியில் ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“கர்நாடக மாநிலத்திற்கு ரூ. 7564 கோடி ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 97% ரயில் வழித்தடங்கள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது. விரைவில் முழுவதும் மின்மயமாக்கப்படும். கேரளா மாநிலத்தில் ரூ. 3042 கோடி ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரயில்வேக்கு ரூ.6626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது UPA அரசு ஒதுக்கியதை விட 7.5 மடங்கு அதிகம்.
1303 கிலோ மீட்டர் தூரம் 2014 முதல் இதுவரை ரயில்வே தடம் அமைக்கப்பட்டுள்ளது. எழும்பூர் உட்பட 77 ரயில்நிலையம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 50 நமோ பாரத் புதிய ரயில்கள் இயக்க இந்த பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் ரயில்வே பாலம் ஒரு தனித்துவமானது. அந்த பாலத்திற்கான அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ளது. CRS கூறியுள்ள கருத்துகள் தொடர்பாக ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. பாம்பன் பாலம் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ரயில்வே திட்டங்களை செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தனுஷ்கோடி ரயில்வே திட்டம் மத்திய அரசு தரப்பில் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனால், மாநில அரசு தரப்பில் அதனை செயல்படுத்த விருப்பப்படவில்லை"
இவ்வாறு ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.