For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Palani - ல் தமிழர் சிந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்... முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

09:11 PM Aug 25, 2024 IST | Web Editor
 palani   ல் தமிழர் சிந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்    முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்
Advertisement

முத்தமிழ் முருகன் மாநாட்டில் பழனியில் ‘தமிழர் சிந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்’ அமைத்திட அரசுக்கு பரிந்துரைப்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

Advertisement

தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நேற்றும் இன்று பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. மாநாட்டின் இறுதியாக இந்த மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதன்படி, உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அவரின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோயில் திருப்பணிகள், குடமுழுக்குகள், திருவிழாக்கள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகியவற்றிற்குக் காரணமான தமிழ்நாடு அரசுக்கு இம்மாநாட்டில் ஏகமனதாக நன்றி தெரிவித்துக்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான முருகன் கோயில்களைத் தேர்வு செய்து திருப்பணிகள் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தீர்மானத்தின்படி, முதற்கட்டமாக 143 முருகன் கோயில்களில் சுமார் 50 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் தொடங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

முருகன் கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள், ஓதுவார்கள், கலைஞர்கள் மற்றும் முருகன் அடியார்களைச் சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் 10 நபர்களுக்கு விருதுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது. அறுபடை வீடு கோயில்களில், முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி, திருவிழாக்கள் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது. அறுபடை வீடு பயணம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை 2024-2025ம் ஆண்டுகளில் 1000-லிருந்து 1500-ஆக உயர்த்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நினைவாகப் பழநியில் 'வேல்' நிறுவுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. முருக வழிபாட்டிற்கு உகந்த, "கடம்ப மரக்கன்றுகள் மற்றும் அரிய வகை மரக்கன்றுகளை" முருகன் கோயில்களில் நட்டு பராமரிப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது. கந்தசஷ்டி விழாக் காலங்களில் முருகன் கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

முருகன் கோயில்களில் ஓதுவார்கள் நியமனம் செய்தல்; அவ்வாறு ஓதுவார்கள் நியமனம் செய்யும் பொழுது இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள கோயில்களின் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப்பள்ளி மாணவர்களுக்குப் பணிநியமனத்தில் முன்னுரிமை வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது. தேனூர் வரகவி சொக்கலிங்கனார் எழுதிய "சேய்த்தொண்டர் புராணம்" என்ற நூலை, தெளிவுரையுடன் கூடிய பதிப்பாக முதல் முறையாக வெளியிடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

முருகப்பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது. வெளிநாட்டில் வாழும் முருக பக்தர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைதரும் போது, அவர்களுக்கு அறுபடை வீடு கோயில்களுக்குச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் வாழும் முருக பக்தர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைதரும் போது அவர்களுக்குத் திருவிழா மற்றும் சிறப்புக் காலங்களில் வழிபாட்டிற்கு உதவும் வகையில், கைபேசி செயலி மூலம் வழிபாட்டு வசதிகள் செய்து தருவது என்று தீர்மானிக்கப்படுகிறது. கோயில்களில் தமிழுக்கு முன்னுரிமை தரும் வகையில், தமிழில் குடமுழுக்குகள் மற்றும் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று தீர்மாணிக்கப்படுகிறது.

முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிலைத்த அடையாளமாக 'முத்தமிழ் முருகன் ஆய்வு மையம்' அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது. கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த குடியாம் தமிழ்குடியின் மருத்துவமாம் சித்த மருத்துவத்தை இனி வரும் காலங்களில் "தமிழர் சித்த மருத்துவம்" என்று அழைத்திட அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

தொன்மைச் சிறப்புடைய பாரம்பரியமான தமிழர் மருத்துவமே சித்த மருத்துவம். அம்மருத்துவத்தில் பிணி போக்குவதில் மணி மகுடமாக திகழ்கிற தமிழர் சித்த மருத்துவத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும், அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றிடவும், நவபாசானத்தில் போகர் சித்தரால் சிலை வடிக்கப் பெற்ற தமிழ்க் கடவுளான முருகப் பெருமான் வீற்றிருக்கும் பழனியில் "தமிழர் சிந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்" அமைத்திட அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு ரூ.99.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் முதற்கட்ட பணிகளையும், ரூ.158.90 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பணிகளையும் விரைவுபடுத்தி பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர திருவிழாக்காலங்களில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 10,000 பக்தர்கள் வீதம் 20 நாட்களுக்கு 2,00,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி நாள் ஒன்றுக்கு 20,000 பக்தர்கள் வீதம் 20 நாட்களுக்கு 4,00,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

பழனி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை உலகெங்கும் வாழும் தமிழர்கள் மற்றும் முருக பக்தர்கள் பெருமை கொள்ளும் வகையில் சீரும் சிறப்புமாய் நடத்திட உறுதுணையாக இருந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமிக்கும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணிக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி இம்மாநாட்டினை செவ்வனே நடத்திட உறுதுணையாக செயல்பட்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுக்கும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும், சமயச் சான்றோர்களுக்கும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், இந்து சமய அறநிலையத் துறை அரசு முதன்மைச் செயலருக்கும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும், முழுமையாக ஒத்துழைப்பு நல்கிய பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement