பாலமேடு ஜல்லிக்கட்டு | இறுதிச்சுற்று தொடங்கியது!
இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தை முதல் நாளன்று மதுரை அவனியாபுரத்தில் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதனையடுத்து, இன்று (ஜன.15) மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் காலை 7.40 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் 1000-க்கும் பேற்பட்ட காளைகள் மற்றும் 900-ற்கும் மேற்பட்ட மாடுபுடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். மகாலிங்க சாமி மடத்து கமிட்டி கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றனர்.
போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 8 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. 8வது சுற்றில் 4 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். 8 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மாடுபிடி வீரர்கள் 24 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 12 பேர், பார்வையாளர்கள் (சிறுமி உட்பட) 8 பேர் என இதுவரை மொத்தமாக 44 பேர் காயமடைந்துள்ளனர். மேல்சிகிச்சைக்காக 4 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 9வது சுற்று இறுதிச்சுற்றாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.