”பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்” - வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேட்டி!
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தமிழர்கள் மூவர் உட்பட பலர் காயமடைந்த நிலையில், தற்போது அங்குள்ள மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு - காஷ்மீர் அரசு ரூ. 10 லட்சம் நிதி நிவாரணம் அறிவித்தது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகளில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள், உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஆலோசிக்க ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அனைத்து கட்சி கூட்டதிற்கு அழைப்பு விடுத்தார். பின்னர் கேபினட் அமைச்சர்களின் சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இந்த தாக்குதலுக்கு தொடர்பில்லை என பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. தொடர்ந்து பிரதமர் மோடி இல்லத்தில் பாதுகாப்பு தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “SVES விசாக்களின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதி இல்லை. கடந்த காலங்களில் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட SVES விசாக்கள் ரத்து செய்யப்படுகின்றன. SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
அட்டாரி - வாகா எல்லை உடனடியாக மூடப்படுகிறது. பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.