இங்கிலாந்து உடனான தோல்விக்கு விளக்கமளித்த பாகிஸ்தான் அணி கேப்டன் #ShanMasood!
இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் விளக்கம் அளித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 7ம் தேதி முல்தானில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 149 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 556 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 150 ஓவர்களில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து, தனது 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 54.5 ஓவர்களில் 220 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 47 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் கூறியதாவது,
"மீண்டும் தோல்வி அடைந்தது வருத்தமாக உள்ளது. முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்திருந்தால் 3 மற்றும் 4வது நாளில் சாதகமாக இருந்திருக்கும். கடந்த 2022ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் முல்தானில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆடுகளத்தை மேம்படுத்தும் நபர்களுடன் பேச எங்களுக்கு போதியளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.
பாகிஸ்தான் அணி முந்தைய தவறுகளில் இருந்து எதையுமே கற்றுகொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் அதே தவறைதான் செய்கிறது. யார் ஒருவரையும் குறிப்பிட்டு குறை கூறமுடியாது. எல்லோரையும்தான் குறைகூற வேண்டும். நாங்கள் பேட்டிங் ஆட வந்த சமயம் 4-ஆம் நாளில் ஆடுகளத்தில் சில இடங்களில் வெடிப்புகள் காணப்பட்டன. அது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும் எங்களுக்கு பாதகமாகவும் அமைந்தன."
இவ்வாறு பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.