“நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது” - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையில் 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து உத்தரவுகளை இந்தியா பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்துள்ளது. குறிப்பாக சிம்லா ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அபோதாபாத்தில் உள்ள ஒரு இராணுவ அகாடமியில் நடந்த விழா ஒன்றில் பேசிய ஷெரீப், “எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.
“சர்வதேச ஆய்வாளர்கள் நடத்தும் எந்தவொரு விசாரணைக்கும் பாகிஸ்தான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறியதைத் தொடர்ந்து ஷெரீப்பின் கருத்துக்கள் வந்துள்ளன.
மேலும், உள்நாட்டு அரசியலுக்காக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கு, இந்தியா பயங்கரவாத தாக்குதலை ஒரு சாக்காகப் பயன்படுத்தியதாக ஆசிப் குற்றம் சாட்டினார். எந்த ஆதாரமும், விசாரணையும் இல்லாமல் பாகிஸ்தானை தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் போர் வெடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் இந்தப் போர் வெடிப்பது இந்தப் பிராந்தியத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும்” எனவும் ஆசிப் தெரிவித்தார்.