பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கு முடக்கம் - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில், அட்டாரி வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகள் வெளியேற வேண்டும், சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகள் வெளியாகின.
இந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தின் கணக்கை இந்திய பயனர்கள் காண முடியாதவாறு மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே போடப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளை டெல்லி காவல்துறை அகற்றியுள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்தை மூட மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.