#Pakistan | மகளின் தலையில் சிசிடிவி மாட்டிய தந்தை.. வலுக்கும் ஆதரவும், விமர்சனங்களும்..
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய படி வலம் வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகின்றன. அவை தகவல்கள் நிறைந்ததாகவும், பாராட்டும் வகையிலும், பொழுதுபோக்காகவும் அமைந்திருக்கும். சில வீடியோக்கள் விசித்திரமாக இருக்கும். அந்த வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வளரும்போதும், வளர்ந்த பிறகும் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பது வழக்கம். ஆனால், பாகிஸ்தானில் தந்தை ஒருவர் தனது மகளின் பாதுகாப்பிற்காக செய்த காரியம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கராச்சி நகரில் வசித்து வரும் அவர் தனது மகளை கண்காணிப்பதற்காக தனது மகளின் தலையிலே சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். அந்த பெண்ணும் வெளியில் எங்கு சென்றாலும் சிசிடிவியுடனே நடமாடுகிறார்.
அப்பெண்ணிடம் இதுதொடர்பாக கேட்டதற்கு தனது தந்தையின் இந்த செயல் தனது முழு ஒப்புதலுடன் நடைபெற்றதாக கூறியுள்ளார். “பாகிஸ்தானின் முக்கியமான மற்றும் பரபரப்பான நகரமான கராச்சியில் சிறுமிகளுக்கு எதிராக அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடக்கிறது. ஆனால் அதற்கு போதுமான ஆதாரங்களும், நீதியும் கிடைக்கவில்லை. எனக்கு ஏதாவது நிகழ்ந்தால் குறைந்தபட்சம் ஆதாரமாவது கிடைக்கும். என்னுடைய அப்பா எது செய்தாலும், அது என்னுடைய நல்லதுக்குதான் செய்வார். அதனால் என்னுடைய அப்பாவின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை” என்று அந்த பெண் கூறியுள்ளார்.
மேலும், இந்த சிசிடிவி காரணமாக வெளியில் செல்லும்போது அந்த பெண்ணை அவரது தந்தை கண்காணிக்க முடியும் என்றும் அந்த பெண் கூறியுள்ளார். தந்தையின் இந்த முயற்சிக்கு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும், அந்த பெண்ணின் தனியுரிமை இதனால் பாதிக்கப்படும் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.