ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான் வழித்தாக்குதல் ; குழந்தைகள் உள்பட10 பலி...!
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாகிஸ்தானுடனான உறவுகள் கடுமையாக மோசமடைந்துள்ளன. பாகிஸ்தானில் தொடர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. ஆப்கானிஸ்தானின் தலீபான் அரசாங்கம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடந்த அக்டோபரில், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மோதல் மூண்டது. இதில் இரு தரப்பிலும் சுமார் 70 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானின் பாக்டிகா, குனார் உள்ளிட்ட 4 மாகாணங்களில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 9 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என 10 பேர் பலியாகியுள்ளதாகவும் நான்கு பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாக்குதல் சம்பவத்தை கண்டித்துள்ள தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இதற்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கம் "சரியான நேரத்தில் சரியான முறையில் பதிலளிக்கும்" என்று எச்சரித்துள்ளார்.