பத்ம விருதாளர்களுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா - நடிகர் அஜித் குமார் பங்கேற்கவில்லை!
பல ஆண்டுகளாக சுகாதாரம், விளையாட்டு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களை மத்திய அரசு பத்ம விருகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த குடியரசு தினத்தன்று 139 நபர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. 7 நபர்களுக்கு பத்ம விபூஷன் விருதும், 19 நபர்களுக்கு பத்ம பூசன் விருதும், 113 நபர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர்கள் அஜித் குமார் , ஷோபனா சந்திரகுமார் , நல்லி குப்புசாமி செட்டி ஆகியோருக்கு கலைப் பிரிவில் பத்ம பூசன் விருது அறிவிக்கப்பட்டது. அதே போல் பத்ம ஸ்ரீ விருதுகள் ரவிச்சந்திர அஸ்வின்(கிரிக்கெட்) , எம்.டி.ஸ்ரீனிவாஸ்(அறிவியல்) , தாமோதரன் (சமையல் , குருவாயூர் துரை(கலை), சீனி விஸ்வநாதன் (கல்வி) , ஆர்.ஜி.சந்திர மோகன்(தொழில்), ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி (கலை), வேலு ஆசான்(கலை), புரிசை கண்ணப்ப சம்பந்தன் (கலை) லட்சுமிபதி ராம சுப்பையர் (இலக்கியம்) உள்ளிட்ட 13 பேருக்கு பத்ம விருகள் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட தமிழர்களுக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் நல்லி குப்புசாமி, சோபனா, குருவாயூர் துரை, தாமோதரன், ஶ்ரீனிவாஸ் புரிசை கண்ணப்பசம்பந்தன், வேலு ஆசான், ராதாகிருஷ்ணா தேவ சேனாபதி, லட்சுமிபதி ராம சுப்பையர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த பாராட்டு விழாவில் நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வின், சந்திரமோகன், ஶ்ரீனி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. விளையாட்டு வீரர் அஸ்வினுக்கு பதிலாக அவரது பெற்றோர்கள் பாராட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளனர். பத்ம விருதுகள் பெறவுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆளுநர் பாராட்டுகளை தெரிவிக்க உள்ளார்.