நெல்லை | செப்டிக் டேங் குழியில் விழுந்து முதியவர் உயிரிழப்பு!
நெல்லை அருகே செப்டிக் டேங் குழியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நகர சீரமைப்பு திட்டம் நடைப்பெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் புதிய பேருந்து நிலையத்தில் செப்டிக் டேங்க் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்தக் குழிக்குள் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அறிந்த வள்ளியூர் போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைபற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் வள்ளியூர் சொக்கநாதர் கோயில் தெருவை சேர்ந்த முருகன் (வயது 60) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வள்ளியூர் நகர பஞ்சாயத்து ஒன்பதாவது வார்டு திமுக செயலாளராக இருந்து வந்ததும் தெரியவந்தது. இவர் நேற்று இரவு பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது பாதுகாப்பற்ற முறையில் இருந்த செப்டிக் டேங்க் குழியில் விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.