ரீரிலீஸுக்கு தயாராகும் ரஜினியின் 'படையப்பா' திரைப்படம் - ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் ரஜினிகாந்த் சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை கொண்டாடும் விதமாக 'படையப்பா' படம் ரீ-ரிலிஸ் செய்யப்படும் என்று கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலங்களில் புதிய திரைப்படங்களை தாண்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ரசிகர்கள் மத்தியிலும் அடுத்தடுத்து தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்களில் மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வருகிறது.
இதனையடுத்து பிரபல நடிகர்களின் ஹிட் திரைப்படங்களை மீண்டும் டிஜிட்டல் பதிப்பில் ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர். ரஜினிகாந்தின் பாபா, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், சூர்யாவின் வாரணம் ஆயிரம், அஜித்குமாரின் வாலி, பில்லா, விஜய்யின் கில்லி என ஏராளமான திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன.
இந்நிலையில் ரஜினியின் சிறந்த படங்களில் ஒன்றான ‘படையப்பா’ மீண்டும் ரீ-ரிலீஸாக உள்ளது. இந்த படம் 1999-ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், ராதாரவி, லெட்சுமி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. வசூலில் சாதனை படைத்த இப்படம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வென்றுள்ளது.
படையப்பா படம் ரீ-ரிலிஸ் செய்யப்படும் என அப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் சினிமாத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை கொண்டாடும் வகையில் கே.எஸ்.ரவிக்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.