கபிஸ்தலம் மனோன்மணி மாரியம்மன் கோயிலில் பாடை காவடி திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
கபிஸ்தலம் மனோன்மணி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பாடை காவடி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கும்பகோணம் அருகே மேல கபிஸ்தலத்தில் மனோன்மணி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட பங்குனி திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் அம்மன் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடை காவடி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக பக்தர்கள் கோயில் அருகே உள்ள காவேரி ஆற்றங்கரையில் இருந்து பாடை காவடி, பால்குடம், அழகு காவடி எடுத்து கபிஸ்தலம் முக்கிய வீதி வழியாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.