“நாட்டின் அடுத்த பிரதமராக யார் இருந்தாலும் உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!” - ப.சிதம்பரம் பேட்டி!
நாட்டின் அடுத்த பிரதமராக யார் இருந்தாலும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவது தவிர்க்க முடியாதது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து ஏப்.26ம் தேதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தனது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தான் மூன்றாவது முறையாக பிரதமரானால் மட்டுமே,நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை விட இரண்டு இடங்களுக்கு உயர்ந்து, நாட்டை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவேன் என்று நாட்டு மக்களுக்கு உத்தரவாதம் அளித்து வருகிறார்.
இதையும் படியுங்கள் : #GTvsRCB : 9 வீட்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!
இந்நிலையில், "நாட்டின் அடுத்த பிரதமராக யார் இருந்தாலும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறுவதை தவிர்க்க முடியாதது" என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
"யார் அடுத்த பிரதமரானாலும் இந்தியாவின் பொருளாதாரம் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தை எட்டுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் இந்தியா அதன் மக்கள்தொகையின் அளவைக் கருத்தில் கொண்டும்,அவர்களின் வாங்கும் திறன், பொருளாதார செயல்பாடுகள் ஆகியவை தொடர்ந்து சாதனையை எட்டும்.குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தியா தனது பொருளாதார சாதனைகளை எட்டிக் கொண்டுதான் இருக்கும்.
2004-இல் இந்தியா ஜிடிபி வளர்ச்சியில் 12-ஆவது இடத்தில் இருந்தது. 2014-இல் ஏழாவது இடத்துக்கு உயர்ந்தது. 2024-இல் ஐந்தாவது இடத்துக்கு வந்தது. யார் பிரதமராக இருந்தாலும், அடுத்ததாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறும். அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த இடத்தில் ஜெர்மனி உள்ளது. உலகின் முதல் 10 பொருளாதார நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் அந்தந்த தரவரிசையில் இந்தியாவை விட கீழே உள்ளன.
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு அதன் மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கான உண்மையான கணக்கீடு அல்ல என்றும், தனிநபர் வருமானம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதே மிகவும் துல்லியமான கணக்கீடாகும்.ஆனால் இந்த விஷயத்தில் சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2024 கணக்கெடுப்புப் படி, இந்தியா அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் யுஎஸ்டி 2,731 உடன் சர்வதேச தரவரிசை பட்டியலில் 136 ஆவது நாடாகவே உள்ளது". இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.