Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நிரம்பி வழியும் ரயில்கள்... ரயில்வே எடுத்த நடவடிக்கை என்ன?" - கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்!

ரயில்வேயில் நிரம்பி வழியும் கூட்டத்தை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்த திமுக எம்.பி கனிமொழி கருணாநிதியின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
09:42 AM Mar 13, 2025 IST | Web Editor
Advertisement

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. ரயில்களில் பயணிகளின் கூட்டம் குறித்த கேள்விகளை எழுத்துபூர்வமாக நாடாளுமன்றத்தில் எழுப்பினார். அதன்படி, "நம் நாட்டில் ரயில்களில் பயணிக்கும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பது குறித்து அரசுக்குத் தெரியுமா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் பிரச்னையைத் தீர்க்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

Advertisement

முக்கிய ரயில்களில் முன்பதிவில்லாத பொது மற்றும் படுக்கை பெட்டிகளின் எண்ணிக்கையை அரசு குறைத்துள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொது, படுக்கை பெட்டிகள் மற்றும் ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்தது/குறைந்தது பற்றிய விவரங்கள் என்ன?

2024-25 ஆம் ஆண்டில் இதுவரை ரயில் பெட்டி தொழிற்சாலைகள் மொத்தமாக தயாரித்த, மற்றும் 2025-26 ஆம் ஆண்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ள பொது/படுக்கை/குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் என்ன?” என்ற கேள்விகளை கனிமொழி கருணாநிதி எம்.பி. எழுப்பி இருந்தார்.

இந்த கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,

”இந்திய ரயில்வேயின் கீழ் இயக்கப்படும் ரயில்களில் கூட்டம் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ‘பீக் பீரியடு’ எனப்படும் அதிக கூட்டமுள்ள காலங்கள், கூட்டம் குறைவான காலங்கள் என வேறுபட்டே இருக்கிறது.
அதிக நெரிசல் உள்ள காலங்களில், குறிப்பாக பிரபலமான வழித்தடங்களில் ரயில்களில் கூட்டம் நிரம்பியே இருக்கும். அதே சமயம் சற்று மக்கள் போக்குவரத்து குறைந்த வழித்தடங்களில் கூட்டம் குறைவாகவே இருக்கிறது.

இந்திய ரயில்வேயில் இயங்கும் ரயில்களின் போக்குவரத்து முறை வழக்கமான கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அதன்படி கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்ய, ஏற்கனவே உள்ள ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன, புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்தில் ரயில்களின் விகிதம் அதிகரிக்கப்படுகிறது. மேலும் ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவதற்கான தொடர்ச்சியான முயற்சியில், இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது.

பயணிகளின் கூடுதல் தேவைகளைப் பூர்த்தி செய்ய பண்டிகைகள், விடுமுறை நாட்கள் போன்றவற்றின் போது சிறப்பு ரயில் சேவைகளையும் இயக்குகிறது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டில், ஹோலி மற்றும் கோடை விடுமுறையின் போது பயணிகளின் கூடுதல் நெரிசலைப் பூர்த்தி செய்ய சிறப்பு ரயில்கள் 13 ஆயிரத்து 523 முறை இயக்கப்பட்டன. துர்கா பூஜை, தீபாவளி பண்டிகைகளின் போது ஏற்பட்ட கூட்டத்தை சமாளிக்க, சிறப்பு ரயில்கள் மூலம் 7990 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அக்டோபர் 1, 2024 முதல் நவம்பர் 30, 2024 வரை சுமார் 1.8 கோடி பயணிகளுக்கு இந்த கூடுதல் ரயில் சேவைகள் பயன்பட்டுள்ளன. சமீபத்தில் முடிவடைந்த மகா கும்பமேளாவின் போது பயணிகளுக்கு வசதியாக, ஜனவரி 13, 2025 முதல் 28 பிப்ரவரி, 2025 வரை 17 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியுள்ளது. இதன் மூலம் தோராயமாக 4.24 கோடி மக்கள் பயன்பெற்றனர்.
மேற்கூறியவற்றைத் தவிர, பல்வேறு பிரிவு பயணிகள் பயன்பெறும் வகையில் பல கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

பயணிகளூக்கான கூடுதல் வசதிகளும் நிரந்தர, தற்காலிக அடிப்படையில் அமைக்கப்பட்டன. 2023-24 ஆம் ஆண்டில், ரயில் சேவைகளை அதிகரிக்க நிரந்தர அடிப்படையில் 872 பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  அதே நேரத்தில் 2024-25 ஆம் ஆண்டில் (பிப்ரவரி 2025 வரை) 983 பெட்டிகள் நிரந்தர விரிவாக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொது மற்றும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு அதிக இடவசதியை வழங்கும் வகையில், மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களில், 22 பெட்டிகள் கொண்ட ரயிலில் 12 பொது மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் 8 ஏசி பெட்டிகள் என்பதுதான் இப்போது பின்பற்றப்படுகிறது.

இதன் மூலம் பொது மற்றும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு அதிக இடவசதி வழங்கப்படுகிறது. மேலும், தற்போது ரயில்களின் மொத்த பெட்டிகளில், மூன்றில் இரண்டு பங்கு ஏசி அல்லாதவை, மூன்றில் ஒரு பங்கு ஏசி பெட்டிகளாக இருக்கின்றன. கூடுதலாக, இந்திய ரயில்வே அமிர்த பாரத் சேவைகள் மூலம் பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.

அதிர்வு இல்லாத பயணம், வசதியான ஜன்னல்கள், மடிக்கக்கூடிய சிற்றுண்டி மேசை மற்றும் பாட்டில், மொபைல் வைக்கும் வசதி போன்ற மேம்பட்ட அம்சங்கள் இந்த நவீன ரயில்களில் இடம்பெற்றுள்ளன. 12 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் 8 பொது வகுப்பு பெட்டிகளைக் கொண்டுள்ள ஏசி அல்லாத இந்த ரயில்கள், பயணிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்குகின்றன.

பயணிகளின் வசதிகளை அதிகரிக்கும் நோக்கில், LHB பெட்டிகளுடன் இயக்கப்படும் மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களில், முன்பதிவு செய்யப்படாத சுமார் 1200 பொது வகுப்பு பெட்டிகள் நடப்பு நிதியாண்டில் இணைக்கப்பட்டுள்ளன.
அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே 17,000 க்கும் மேற்பட்ட பொது வகுப்பு/ஸ்லீப்பர் வகுப்பு (ஏசி அல்லாத) பெட்டிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் (பிப்ரவரி 2025 வரை), ரயில் பெட்டி தொழிற்சாலைகள் 6485 பெட்டிகளை தயாரித்துள்ளன”

இவ்வாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags :
Ashwini VaishnawBJPDMKKanimozhi KarunanidhiKanimozhi MPnews7 tamilNews7 Tamil UpdatesTrainunion govtunion minister
Advertisement
Next Article