தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்!... - வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்து கனமழை பெய்து வந்தது. மேலும் கடந்த வாரங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக உருவான புயலால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்தது.
இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகப் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை என்பது கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி காரைக்காலிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதிகளில் 12 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.