அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு வழக்கு - சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது!
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த தடைவிதித்த தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என கூறி வருவதாலும், அதற்கு தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஒபிஎஸ் தொடர்ந்து கூறிவருவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் ஒபிஎஸ் தரப்பில் பதில் மனு தககல் செய்ய தொடர்ந்து 3வது முறையாக அவகாசம் கேட்டதால் அதிருப்தி அடைந்த நீதிபதி என்.சதீஷ்குமார், பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இதுவரை இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், இபிஎஸ் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒபிஎஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, வழக்கு குறித்து நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஒபிஎஸ் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதி நீக்கம் செல்லும் என்ற உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஈ.பி.எஸ் தரப்பில், தகுதி நீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்சி சின்னம் கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தியதால் வழக்கு தொடரப்பட்டது என வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் இந்த மேல் முறையீட்டு வழக்கில் காட்டிய ஆர்வத்தை தனி நீதிபதியிடம் பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டி இருந்தால் தடை விதிக்கப்படாமல் இருந்திருக்கும் என வாதிடப்பட்டது.
இதனை அடுத்து ஓபிஎஸ் தரப்பிற்கு நிதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். இந்த நிலையில் இருதரப்பு வாதமும் நிறைவுற்றது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில்உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் இந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்க உள்ளனர்.