ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் வழங்கிய விவகாரம்! ஓபிஎஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ராமநாதபுரம் வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது விதிகளை மீறி பணம் வழங்கியது, அனுமதிக்கபட்ட நேரத்திற்கு முன்பாகவே கூட்டம் நடத்தியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், ராமநாதபுரம் வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடந்த பாஜக கூட்டணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இதுபற்றி தேர்தல் ஒளிப்பதிவு செய்யும் கண்காணிப்பு குழு அதிகாரி அருள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, விதிகளை மீறி பணம் வழங்கியது, அனுமதிக்கபட்ட நேரத்திற்கு முன்பாகவே கூட்டம் நடத்தியது உள்பட 3 பிரிவுகளில் அறந்தாங்கி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.