ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு - விழாவை புறக்கணிப்பதாக சங்கராச்சாரியார்கள் அறிவிப்பு!
அயோத்தி கோயிலில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, சங்கர மடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார்கள், இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது, அயோத்தி ரயில் நிலையமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் 25,000 ஹிந்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக 10,000 பேர் பங்கேற்க உள்ளனர்.
கோயில் திறப்பு விழாவின் போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, சங்கர மடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார்கள், இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ள பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, "கோயிலில் சிலையை தொட்டு பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வார், நான் அங்கு சென்று கையைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டுமா? அயோத்தியில் பிரதமரே அனைத்தையும் செய்துவிட்டால் மதகுருமார்களுக்கு செய்வதற்கு மிச்சம் என்ன இருக்கிறது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்." என்றார்.
உத்தரகாண்ட் சங்கராச்சாரியார் சுவாமி அவி முக்தீஸ்வரானந்த் சரஸ்வதி, "அரசியல் லாபத்திற்காக மட்டுமே அரைகுறையாக கட்டுப்பட்டுள்ள ராமர் கோயில் திறக்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பாரம்பரியத்தை பின்பற்றவில்லை. நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல, அதே நேரத்தில் எங்கள் தர்ம சாஸ்திரத்திற்கு எதிராகவும் செல்ல முடியாது
கும்பாபிஷேக விழாவில் நான்கு சங்கராச்சாரியார்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். இந்தியாவை பொறுத்தவரையில் மன்னர்களும் மதகுருமார்களும் வேறு வேறு ஆட்களாகவே இருந்துள்ளனர். ஆனால், தற்போது, அரசியல் தலைவர், மதத்தின் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார். இது பாரம்பரியத்துக்கு எதிரானது. அரசியல் லாபத்திற்காக செய்யப்படுகிறது" என தெரிவித்தார்.