Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீட் மூலம் மாணவர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது! பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம்!

05:01 PM Jul 02, 2024 IST | Web Editor
Advertisement

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் மாணவர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகம் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

Advertisement

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பெருமளவு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் குளறுபடி,  60-க்கும் மேற்பட்டோர் முதலிடம் போன்றவை அரங்கேறின.  முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.  மேலும் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டு வரும் 9-ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்,  நீட் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.  அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு இது குறித்து விவாதிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த சு.வெங்கடேசன், மாணிக்கம் தாக்கூர் மற்றும் பல்வேறு மாநில எம்பிக்கள் வலியுறுத்தினர்.  ஆனால், சபாநாயகர் அனுமதி தரவில்லை.  இதனால் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.  மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் நேற்று வெளிநடப்பு செய்தன.

இந்த பரபரப்பான சூழலில்,  நீட்  முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தக் கடிதம் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நீட் தேர்வு  முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி எழுதுகிறேன். ஜூன் 28ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். நேற்று இந்த விவகாரம் குறித்து மீண்டும் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மக்களவையின் சபாநாயகர் இந்த விவகாரம் குறித்து அரசுடன் விவாதிப்பதாக எதிர்க்கட்சிகளுக்கு உறுதியளித்தார்.

இந்த நேரத்தில், எங்களின் ஒரே கவலை இந்தியா முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 24 லட்சம் நீட் தேர்வாளர்களின் நலன் மட்டுமே. லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை ஆதரிப்பதற்காக பல தியாகங்களைச் செய்துள்ளன. வினாத்தாள் கசிவு என்பது மாணவர்களின் கனவுகளுக்கு அரசு செய்த துரோகம். மாணவர்களும், பெற்றோர்களும் மக்கள் பிரதிநிதியான நாங்கள் இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும் என எண்ணுகின்றனர். நீட் தேர்வு மீது உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் அது நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள ஆழமான அழுக்கை அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் கசிந்து, 2 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் மாணவர்கள் பதில்களுக்கு காத்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், மீட்டெடுப்பதற்கும் நாடாளுமன்ற விவாதம் முதல் படியாகும். இந்த விவகாரத்தின் அவசரம் கருதி, நாளை அவையில் விவாதம் நடத்துவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாணவர்களின் நலன் கருதி நீங்கள் இந்த விவாதத்தை நடத்தினால் அது பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
BJPCongressLetterNarendra modiNEETparliamentRahul gandhi
Advertisement
Next Article