For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாராட்டாமல் இபிஎஸ் புலம்பி வருகிறார் " - மேயர் பிரியா விமர்சனம்!

12:43 PM Jul 20, 2024 IST | Web Editor
 அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாராட்டாமல் இபிஎஸ் புலம்பி வருகிறார்     மேயர் பிரியா விமர்சனம்
Advertisement

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு மனமில்லாமல் புலம்பித் தவிக்கிறார் என மேயர் பிரியா விமர்சனம் செய்துள்ளார். 

Advertisement

கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகத்தை ஆரம்பித்தார். முதன் முதலில் சென்னையில்தான் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள், குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு செல்லும் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த அம்மா உணவகம் பயனுள்ளதாக இருந்தது.

இதன்படி சென்னையில் மட்டும் வார்டுக்கு இரண்டு என மொத்தம் 407 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.  சென்னையை பொறுத்தவரை பல்வேறு காரணங்களுக்காக 5 உணவகங்கள் மட்டும் மூடப்பட்டன. அதிமுக ஆட்சியைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியிலும் அம்மா உணவங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது சென்னையில் 402 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன.

நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு சமையலறைக்கு சென்ற முதலமைச்சர் தயாராகிக் கொண்டிருந்த உணவை சாப்பிட்டு பார்த்தார். பின்னர் அம்மா உணவக ஊழியர்களிடம், உணவு தயாரிக்கும் முறைகளை கேட்டறிந்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “ அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்து விட்டு, தற்போது முதலமைச்சர் முதலை கண்ணீர் வடிப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். புதிய அம்மா உணவகங்களை திறந்து தரமான உணவு வழங்க வலியுறுத்தினார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா தெரிவித்துள்ளதாவது..

“ திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை.  கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக முதலமைச்சர் திகழ்கிறார்.

அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை. திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்.” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement