“தமிழ்நாட்டில் எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் ஒன்றாக கூட்டணி அமைத்துள்ளன!” - தேனியில் ஓபிஎஸ் பேச்சு!
உலகத்திலேயே தமிழ்நாட்டில் தான் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி ஒன்றாக கூட்டணி அமைத்து உள்ளன என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
தேனியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் கூறியதாவது:
எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் அதனை பற்றி கவலைப்படாமல் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா தான் என்னை முதல்வராக ஆக்கினார், அதை அவரிடம் திருப்பி கொடுத்தேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றவர். காலில் தவழ்ந்து தவழ்ந்து பெற்றார் என்பதை EPS ஏற்றுக் கொண்டுள்ளார். நாடளுமன்ற தேர்தலில் கூட்டணிக்காக பல கட்சிகள் நம்மோடு பேசி கொண்டு இருக்கிறார்கள். தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டோம்.
எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்பு தான் நமது இலக்கு. எடப்பாடி பழனிச்சாமி தானாகவே பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதிமுகவில் உள்ள ஒன்னறை கோடி தொண்டர்கள் பழனிசாமியை விரைவில் தூக்கி ஏறிவார்கள். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எங்களுக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். கொடநாட்டில் கொலை கொள்ளையை பன்னியது யார்? இதனை வெளிக்கொண்டு வர மு.க.ஸ்டாலின் தயக்கம் காட்டி மக்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதிக்கிறார். உலகத்திலேயே இங்குதான் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி ஒன்றாக கூட்டணி அமைத்து உள்ளன. இது ஜனநாயகத்திற்கு ஆபத்து. இவ்வாறு ஓபிஎஸ் பேசியுள்ளார்.