மக்களவையில் 'ஆபரேஷன் சிந்தூர்' விவாதம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை!
பகல்காமில் நடைபெற்ற பயங்கவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் மக்களவையில் இன்று மதியம் தொடங்கியது. மத்திய அரசு சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விவாதத்தைத் தொடங்கிவைத்து, இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
ராஜ்நாத் சிங் தனது உரையைத் தொடங்கும்போது, "நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கும் துணிச்சலான வீரர்களையும், நாட்டின் துணிச்சலான மகன்களையும் இந்த அவையின் மூலம் நான் வணங்குகிறேன். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக அனைத்தையும் தியாகம் செய்த வீரர்களின் நினைவுகளையும் நான் வணங்குகிறேன். ஒட்டுமொத்த இந்தியாவின் சார்பாக, ஆயுதப்படைகளின் அனைத்து வீரர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் பகல்காம் தீவிரவாதத் தாக்குதலை இந்தியாவின் பொறுமைக்கு ஒரு எல்லையாகக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், தீவிரவாதத்துக்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கையாக 'ஆபரேஷன் சிந்தூர்' அமைந்தது என்று தெரிவித்தார். இந்தியப் பாதுகாப்புப் படைகள் மிகுந்த பொறுப்புடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டன. இந்த ராணுவ நடவடிக்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், அவர்களின் பயிற்சியாளர்கள் மற்றும் கையாளுபவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இவை அனைத்தும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ.யின் வெளிப்படையான ஆதரவைக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் ஆகும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கினார்.
பாகிஸ்தான் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புகளின் முகாம்கள் மீதான இந்தத் தாக்குதல் 22 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. "இந்தியப் பெண்களின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு இது ஒரு வலுவான பதிலடி" என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார்.
பகல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் இந்திய ராணுவத்தைத் தாக்க முயற்சித்தது என்றும், ஆனால் இந்தியப் பாதுகாப்பு உபகரணங்கள் அவற்றைத் திறம்பட முறியடித்ததாகவும் தெரிவித்தார். "இந்திய இலக்குகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. இந்திய வீரர்களின் வீரத்துக்கும் திறமைக்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்" என்று அவர் பெருமிதம் கொண்டார்.
இந்திய முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார். அதேபோல, இந்திய விமானப்படையின் திறமையை ஒட்டுமொத்த உலகமே 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் கண்டுள்ளது. நமது எதிர் தாக்குதலில் S-400 வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்பு திறமையானது என்பதை நிரூபித்தது என்று கூறினார்.
"இந்தியா தீவிரவாதத்தை பொறுத்துக் கொள்ளாது என்பதை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறின. எந்த அழுத்தத்திலும் நடவடிக்கையை இந்தியா நிறுத்தவில்லை" என்று ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரம் குறித்துக் கூறிய கருத்துக்களுக்கு ராஜ்நாத் சிங் மறுப்பு தெரிவித்தார். பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது என்றும், இந்த ஆப்ரேஷன் மூலம் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் விமானத் தளங்கள் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகிப் பெரும் சேதம் அடைந்தன என்றும், இதனால் உடனே பாகிஸ்தான் மோதலை நிறுத்தக் கோரிக்கை வைத்தது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இறுதியாக, "பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு, தாக்குதலை நிறுத்தக் கோரிக்கை வைத்தது. 'ஆபரேஷன் சிந்தூர்' முடிவடையவில்லை. தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும்" என்று ராஜ்நாத் சிங் எச்சரித்தார்.