ஆபரேஷன் சிந்தூர் - பயங்கரவாத அமைப்பு தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் பலி!
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இந்த சூழலில் இந்தியா நேற்று(மே.07) நள்ளிரவு, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு முகாமில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இது குறித்து இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், பொதுமக்கள் குறிவைக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
தொடர்ந்து இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப், இந்திய நடத்திய தாக்குதலை கோழைத்தனமானது என்றும் பதிலடி கொடுக்க உரிமை உள்ளது என்று கூறினார். தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசியபோது, தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மட்டும் இல்லை. இதில் இரண்டு மசூதிகள் உட்பட பொதுமக்களும் பாதிக்கப்படிருப்பதாக தெரிவித்தார். அதே போல் சில ஆங்கில ஊடகங்களிலும் பொதுமக்கள் பாதிக்கப்படிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தனது குடும்பத்தினர் 10 பேர் மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர், இந்தக் கொடுமையான செயல் அனைத்து எல்லைகளையும் உடைத்துவிட்டது. இனி யாரும் கருணையை எதிர்பார்க்கக்கூடாது என இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்தார்.