‘ஆப்ரேசன் அகழி’...சிக்கிய அரசியல் பிரமுகர்... பலகோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் - திருச்சி #SP வருண்குமார் செய்த சிறப்பு சம்பவம்!
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்ரேசன் அகழி’ என்ற சோதனையில் அரசியல் பிரமுகர் ஒருவர் சிக்கியுள்ளார். மேலும் பலகோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
‘ஆப்ரேசன் அகழி’ என்கிற பெயரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் 25 தனிப்படைகளை அமைத்தார். இந்த தனிப்படைப் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிரபு, கொட்டப்பட்டு ஜெய், பட்டறை சுரேஷ் என்கிற மைக்கேல் சுரேஷ், டேவிட் சகாயராஜ், பாலு, பிரதாப் ராஜ்குமார், கருப்பையா, பாதுஷா என்கிற பல்பு பாட்ஷா, கரிகாலன், கோபாலகிருஷ்ணன், சந்திரமௌலி, குருமூர்த்தி, டி.டி கிருஷ்ணன் ஆகிய 14 நபர்களின் விவரங்களை சேகரித்து மொத்தம் 14 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் இவர்களிடமிருந்து 258 சொத்து ஆவணங்களும், 68 வங்கி கணக்கு புத்தகங்களும், 75 ப்ரோ நோட்டுகளும், 84 சிம்கார்டுகளும் கைப்பற்றப்பட்டன. இதில் 31 புதுச்சேரி மது பாட்டில்களும் இந்திய ஜனநாயக கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்து வந்த, மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டறை சுரேஷ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.
மேலும் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு நடுக்கரை சோதனை சாவடியில், வேகமாக வந்த ஸ்கோடோ ஆக்டேவியா காரை நிறுத்த முற்பட்டனர். அப்போது காரை ஓட்டி வந்த நபர்கள், முக்கொம்பு நடுக்கரை பூங்காவில் மோதி விட்டு சிலர் தப்பி சென்றனர். காரை சோதனை செய்தபோது அதிலிருந்து ஒரு அரிவாள், இரும்பு, வாள், இரண்டு இரும்பு ராடு போன்ற ஆபத்தான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பின்னர் காரில் உள்ளே அமர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். காரில் இருந்த திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த சந்திரமௌலி என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொருளாளராக அவர் பதவி வகித்து வந்ததும், எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
அவரை விசாரித்த போது காவல்துறையினரை மிகவும் மோசமாக திட்டி, வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதனையடுத்து வாத்தலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளதாவது;
நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து செய்த நபர்கள் மீது அடுத்தடுத்த வழக்குகள் பதிவு செய்யப்படும். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.