"திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே இளைஞர்களை காப்பாற்ற முடியும்" - எச்.ராஜா பேச்சு!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கத்தின் 5-வது ஆண்டு விழா மற்றும் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா, பாஜக மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீ ராம. ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆண்டு விழாவையொட்டி வியாபாரிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பேசிய பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, "தேசத்தின் வளர்ச்சிக்கு வியாபாரிகளின் உழைப்பும் அதனால் வரும் பொருளாதாரத்தின் பங்கும் மிக முக்கியமானது என்றார். தற்போது இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகி உள்ளதாகவும், வரும் 2027 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கும். மேலும் தொடர்ந்து பேசியவர் திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பில் நடந்துவரும் பெருந்திட்ட பணிகளில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
கோயிலின் குறைபாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துரிமையை தெரிவித்தால் வழக்குப் பதிவு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது, ஜாதி பாட்ஷா போன்ற திமுகவினரே அதிகளவில் கஞ்சா விற்பனைக்கு காரணமாக உள்ளார்கள். தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கூறிய அவர் சென்ட்ரல் பள்ளிகளில் பயிலக்கூடிய ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் மகன்களுக்கு கஞ்சா விற்பனை செய்து அவர்களை கஞ்சா போதைக்கு அடிமை ஆக்குவதாக கூறியவர் இந்த அபாயகரமான அரசை அகற்றினால் மட்டுமே தமிழ்நாட்டையும், திமுவையும் காப்பாற்றமுடியும்" என்று தெரிவித்துள்ளார்.