Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல்" - இபிஎஸ் குற்றச்சாட்டு

டாஸ்மாக்கில் ஒருநாளைக்கு ரூ.15 கோடி ஊழல் நடக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 
01:30 PM Apr 22, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனங்களில் நடத்திய சோதனை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் வாய்ப்பு கேட்டார். இதற்கு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அனுமதி மறுத்ததை கண்டித்து, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

"டாஸ்மாக் நிறுவனம், மற்றும் மது ஆலைகளுக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது குறித்து விவாதிக்க வாய்ப்பு கேட்டேன். மதுவிலக்கு துறை மானிய கோரிக்கை விவாதத்தில் இது குறித்து பேசினால் தான் உரிய பதில் கிடைக்கும் என்று, இன்று பேரவையில் பேச முயன்றேன். ஆனால் இந்த பிரச்னை குறித்து பேசுவதற்கு பேரவை தலைவர் முழுமையாக மறுத்துவிட்டார்.

மக்களுடைய பிரச்னையை பேசுவது தான் சட்டப்பேரவை. பிரதான எதிர்க்கட்சியாக மக்களுடைய பிரச்னை மற்றும் நாட்டில் நிலவுகின்ற ஊழல் குறித்து சட்டப்பேரவையில் எடுத்துரைக்க கடமை எங்களுக்கு உள்ளது. இன்றைய தினம் சட்டப்பேரவை தலைவர் ஜனநாயகப்படி நடக்கவில்லை. ஒரு துறையை பற்றி பேச 10 நிமிடம் மட்டுமே நேரம் ஒதுக்கப்படுகிறது. 10 நிமிடத்துக்குள் ஒரு துறையை பற்றி எப்படி பேசி முடிக்க முடியும்?

ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை அளித்த அறிக்கை குறித்து, இதுவரையில் தமிழக அரசின் சார்பிலோ, துறை சார்ந்த அமைச்சர் சார்பிலோ இதுவரையில் விளக்கம் அளிக்காதது ஏன்? இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்காததை பார்க்கும் பொழுது, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள குற்றச்சாட்டு உண்மை தானோ? என்று எண்ண தோன்றுகிறது.

டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. 12 மாதங்களுக்கு ரூ.5400 கோடி வசூல் செய்யப்பட்டிருக்கிறது.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அண்மைக்காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு பிரச்னையால், தமிழ்நாடு குடிநீர் வாரிய மின் மோட்டார்கள் முறையாக செயல்படாததால், சென்னை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கவும் சிரமமாக இருக்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கிடைக்காததால் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர். இதனால் விவசாய தொழிலாளர்களுக்கும் முறையாக வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. திமுக ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 70 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு தொழில் தொடங்க சென்று விட்டனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும் என்ற வாக்குறுதி, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது. இதனைப் பார்க்கும் பொழுது 2021 ஆம் ஆண்டு திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காகவே தயாரிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி என்று தெரிகிறது"

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKAIADMKassemblyedappadi palaniswamiEPSTN Assembly
Advertisement
Next Article