ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு - சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 13) விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த விசாரணை நடைபெறுகிறது.
சமீபகாலமாக, பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இது இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருமானம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருகிறதா என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சுரேஷ் ரெய்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லை. மேலும், இது சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக, இது போன்ற செயலிகளை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த சம்மன், அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த வழக்கில் சுரேஷ் ரெய்னா அளிக்கும் வாக்குமூலம் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.