ஆன்லைன் சூதாட்டம் - பணத்தை இழந்த விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட வடமாநில இளைஞர்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை மினிக்கம்பட்டியில் பி.கே லட்சுமி என்ற தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜன் (வயது 20) என்ற இளைஞர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக நூற்பாலைக்குள் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். இவரது அறையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமர்ஜித்குமார் மற்றும் சங்கரராயர் ஆகியோர் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பணிக்கு சென்று விட்டு அமர்ஜித்குமார் மற்றும் சங்கரராயர் இருவரும் அறைக்கு சென்ற போது அறையின் கதவை உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. இதனால் நீண்ட நேரமாக கதவை தட்டியும் ராஜன் திறக்காததால், பின்பக்கம் சென்று பார்த்தபோது ராஜன் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்ட அமர்ஜித்குமார் கூச்சலிட்டு அலறியுள்ளார்.
பின்னர் விடுதியில் இருந்தவர்களின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜன் உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நூற்பாலை அதிகாரிகள் வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தியதில் ராஜன் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடியது தெரிய வந்தது. மேலும் ஆன்லைன் சூதாட்டதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டுமே சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்ததால் விரக்தியில் உயிரை மாய்த்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குறைந்த சம்பளத்தில் நூற்பாலையில் பணியாற்றும் வடமாநில இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.