For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஓராண்டு கால முதுகலை பட்டப்படிப்புகள் அரசுப்பணி நியமனத்துக்கு செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்!

12:10 PM Jun 20, 2024 IST | Web Editor
ஓராண்டு கால முதுகலை பட்டப்படிப்புகள் அரசுப்பணி நியமனத்துக்கு செல்லும்   சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement

அரசு பணிகளில் நியமனம் பெற ஓராண்டு முதுகலை படிப்புகள் தகுதியானவை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

மேலும்,  பிளஸ் 2 முடித்த பிறகு இளகலை பட்டப்படிப்பு மூன்றாண்டு முடித்து விட்டு, ஓராண்டு முதுகலை பட்டப்படிப்பு முடித்த மனுதாரரை தட்டச்சர் பணியில் நியமிக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி,  முதுகலை சட்டம் மற்றும் முதுகலை நூலக அறிவியல் போன்ற ஓராண்டு பட்டப்படிப்புகள் செல்லுபடியாகும் படிப்புகளாக உள்ளன.  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டத்தின் 25-வது பிரிவைக் குறிப்பிட்டு,  பத்தாம் வகுப்பு ,பிளஸ் 2 என்ற அடிப்படைப் பள்ளிக் கல்வி கூட இல்லாமல் நேரடி முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களை நீக்குவதே இந்த விதியின் நோக்கம் என்றும்,  முதுகலை பாடத்தின் கால அளவைப் பற்றியது அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பரந்தாமன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரத சக்கரவர்த்தி நடத்திய விசாரணையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 2017-ஆம் ஆண்டு தட்டச்சர் பணிக்கு விண்ணப்பித்த மனுதாரர் பரந்தாமன், 201 மதிப்பெண்கள் பெற்றார்.  பலர் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருந்ததால், ஆட்சேர்ப்புக்கு முதுகலை பட்டங்கள் உயர்தகுதி அடிப்படையில் அமைந்தது.

பரந்தாமன், எம்பிஏ மற்றும் முதுகலை நூலகம் ஆகிய இரண்டு முதுகலைப் பட்டங்கள் பெற்ற போதும்,  விண்ணப்பத்தில் முதுகலை நூலகம் மட்டுமே குறிக்க முடிந்ததால்,  எம்பிஏ-வை அவர் சேர்க்கவில்லை. எனவே, முதுகலை நூலகம் ஓராண்டு பட்டப்படிப்பை தகுதியாக கருத முடியாது என்று அவருக்கு பணி தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  டிஎன்பிஎஸ்சியின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் வருகின்ற ஜூலை 31-ஆம் தேதிக்குள் மனுதாரருக்கு தட்டச்சர் பணி வழங்க உத்தரவிட்டார்.

Advertisement