For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அன்புமணிக்கு ஒரு வாரம் அவகாசம் - ராமதாஸ் அதிரடி முடிவு!

ஒழுங்கு நடவடிக்கை குழுவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
03:42 PM Sep 03, 2025 IST | Web Editor
ஒழுங்கு நடவடிக்கை குழுவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணிக்கு ஒரு வாரம் அவகாசம்   ராமதாஸ் அதிரடி முடிவு
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இடையே சமீப நாட்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த மாதம் 17 ஆம் தேதி  நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகளை ஒழுங்கு நடவடிக்கை குழு முன் வைத்தது. இதனைத் தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை குழுவால் முன் வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் அளிக்க கோரி அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் விளக்கம் அளிக்க வேண்டிய காலக்கெடு கடந்த மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்ட நிலையில் அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை.

Advertisement

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் கடந்த
1ஆம் தேதி பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களான 9 பேர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்  நோட்டீசிற்கு விளக்கம் அளிக்காத அன்புமணி மீது
அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஆலோசனை முடிவுகள் குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் மருத்துவர் ராமதாசிடம் அளித்தனர்.

இந்த நிலையில் பாமக மாநில நிர்வாக குழு கூட்டம் இன்று தைலாபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி, கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, அருள்மொழி, முரளி சங்கர், திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவன தலைவர் ராமதாஸ்,

“இன்றைய நிர்வாக குழு கூட்டத்தில் நோட்டீசிற்கு உரிய விளக்கம் அளிக்க தவறிய அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை குறித்தும், அன்புமணி மீது என்ன விதமான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  அதில்,  நிர்வாக குழு ஆராய்ந்து ஒருவாரம் காலம் அவகாசம் கொடுக்கலாம் என முடிவெடுத்துள்ளது. அதன் படி அன்புமணி அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் வருகிற செப். 10 ஆம் தேதிக்குள் அவர் பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”

என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement