“‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது” - கனிமொழி எம்பி!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா எதிர்ப்பு தொடர்பாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்துள்ள மசோதாவை இன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு, மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. மசோதாவை நிறைவேற்றுவதற்கான மெஜாரிட்டி அவர்களிடம் இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்புவதாக தெரிவித்திருக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்திற்கு, மாநில உரிமைகளுக்கு, மக்கள் உரிமைகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மசோதா.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கலைப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை கொண்டு வந்துள்ளனர். இது குடியரசு தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கும். அடுத்தக்கட்டமாக இந்த மசோதா அதிபர் ஆட்சி முறையை நோக்கி கொண்டு செல்லும். இதனால் தேர்தல் செலவு குறையும் என்கிறார்கள். ஒரு மாநிலத்திலேயே ஒரேகட்டமாக தேர்தல் நடத்த முடிவதில்லை. அப்படி இருக்கையில் நாடு முழுவதும் ஒரேகட்டமாக எவ்வாறு தேர்தல் நடத்த முடியும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான லாஜிஸ்டிக் மற்றும் தேர்தல் அதிகாரிகள் எங்கிருந்து உருவாக்கப்படுவார்கள் போன்றவை குறித்து ஏராளமான கேள்விகள் உள்ளன. தேவையில்லாத ஒரு சுமையை அரசு மீதும், தேர்தல் ஆணையம் மீதும் ஏற்றக்கூடியதாக இருக்கும். இந்த மசோதாவை திமுக எதிர்க்கிறது. எதிர்த்து கொண்டுதான் இருக்கும்” என தெரிவித்தார்.