“ஒரே வரலாறு, ஒரே பாரம்பரியம், ஒரே மொழி தான் ஆர்எஸ்எஸ்-ன் நோக்கம்” - ராகுல் காந்தி பேச்சு!
யுஜிசியின் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளை ரத்துசெய்யக்கோரி இந்தியா கூட்டணித்தலைவர்கள் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தவிர திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் எம்பிக்களும் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ”ஒரே நாடு ஒரே மொழியைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. ஆர்எஸ்எஸ்-ன் நோக்கம், அவர்கள் ஒரே கருத்தை, ஒரே வரலாற்றை, ஒரே பாரம்பரியத்தை, ஒரே மொழியை இந்த நாட்டின் மீது திணிக்க விரும்புவதால் அரசியலமைப்பைத் தாக்குகின்றனர். அதுதான் அவர்களின் தொடக்கப்புள்ளி. அதைத்தான் அவர்கள் அடைய விரும்புகிறார்கள்.
வெவ்வேறு மாநிலங்களின் கல்வி முறையை ஒரே கல்விமுறையாக மாற்றும் முயற்சியாக உள்ளது. இதுபோன்ற பல போராட்டங்கள் நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில், ஆர்எஸ்எஸ்-ஆல் அரசியலமைப்பை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் நமது மாநிலங்களைத் தாக்க முடியாது. அவர்கள் நமது கலாசாரங்கள், நமது மரபுகள், நமது வரலாறுகளைத் தாக்க முடியாது” இவ்வாறு தெரிவித்தார்.