ஒரே நாடு ஒரே தேர்தல் - இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது.
கடந்த மாதம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் மக்களவை ஒப்புதலோடு இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவராக பாஜக எம்பி பி.பி. சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, திமுக சார்பில் டி.எம். செல்வகணபதி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தர்மேந்திர யாதவ், ஹரீஷ் பாலயோகி, விஷ்ணுதத் சர்மா, சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் ஷிண்டே, அனுராக் சிங் தாக்கூர், சம்பித் பத்ரா ஆகியோர் கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மசோதாவின் விதிகள் குறித்து உறுப்பினர்களுக்கு சட்டத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.