“ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது மக்களின் தேவை” - #PMModi ட்வீட்!
ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது மக்களின் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
'ஒரே நாடு; ஒரே தேர்தலை' நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்த குழு தனது ஆய்வு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாகவும், அதைத் தொடர்ந்து 100 நாட்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன
இந்நிலையில், ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பாக ராம்நாத் கோவிந்த் குழு தாக்கல் செய்த அறிக்கைக்கு, பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறுத்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
ஒரு நாடு ஒரு தேர்தல் நடத்துவதற்கான உயர்மட்ட குழு பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இத்திட்டம் எந்த வித அரசியல் நோக்கம் கொண்டது அல்ல. ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது மக்களின் தேவை. நமது ஜனநாயகத்தை துடிப்பாக மாற்றுவதற்கு இது ஒரு முக்கியமான முயற்சி. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு எனது நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.