One Nation One Election | ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் இன்று (டிச. 17) தாக்கல் செய்யப்படவுள்ளது.
மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த 1952-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 1957, 1962-ம் ஆண்டுகளிலும் மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. கடந்த 1968-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களின் சட்டசபைகள் கலைக்கப்பட்டது. அதேபோல் 1970ம் ஆண்டில் மக்களவை கலைக்கப்பட்ட பின் மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
இதை அடிப்படையாக வைத்து ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா வரையறுக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்தது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், நேற்று தாக்கல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை மக்களவையில் இன்று (டிச.17) தாக்கல் செய்கிறார். மக்களவை, சட்டசபை தொடர்பாக ஒரு மசோதாவும், யூனியன் பிரதேசங்கள் தொடர்பாக ஒரு மசோதாவும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளன. இதனிடையே பாஜக தலைமையிலான மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை உறுதியாக நிறைவேற்றும் முடிவில் உள்ளது. அதேநேரம் இந்த திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருவதால் இந்த மசோதாக்களை அவை அறிமுக நிலையிலேயே எதிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அவையில் பெரும் அமளி ஏற்படும் என்று கூறப்படுகிறது. மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என பாஜகவின் அனைத்து எம்.பி.க்களுக்கும் கொறடா உத்தரவு பிறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.