For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆம்ஸ்ட்ராங் கொலைகுறித்த விவரங்கள் தோண்டி எடுக்கப்படும்” - இபிஎஸ்!

05:23 PM Jul 21, 2024 IST | Web Editor
“அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆம்ஸ்ட்ராங் கொலைகுறித்த விவரங்கள் தோண்டி எடுக்கப்படும்”   இபிஎஸ்
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டி எடுக்கப்படும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “சென்னையில் மட்டும் 19 அம்மா உணவகங்களை தமிழ்நாடு அரசு மூடிவிட்டது. அம்மா உணவகங்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை. அம்மா உணவக பணியாளர்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி மேயர் இதுவரை எத்தனை அம்மா உணவகங்கள் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்?. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறித்து இதற்கு மேல் என்னிடம் கேட்க வேண்டாம். ஓபிஎஸ் சொல்வதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஊடக நண்பர்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

திமுகவில் எவ்வளவு பிரச்சனை உள்ளது. அதைப் பற்றி யாரும் விவாதிப்பது கிடையாது. மக்கள் பிரச்னை குறித்து விவாதம் நடத்துவது கிடையாது. அதிமுகவைப் பற்றி மட்டும் தான் விவாதம் நடைபெறுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டி எடுக்கப்படும்.எது கேட்டாலும் சட்ட அமைச்சருக்கு கோபம் வருகிறது. என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது.

இதுவரையில் 23 நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொறுப்பாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளோம்.  ஆலோசனை கூட்டத்தில் அடுத்து வருகின்ற உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும், என்ன யுக்திகளை கையாண்டால் வெற்றி பெற முடியும் என்பது குறித்து கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தலைமை உன்னிப்பாக கவனித்து, உள்வாங்கி அடுத்து வருகின்ற தேர்தலில் செயல்படுத்துவோம். கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் மகன் என்பதால் துணை முதலமைச்சர் பதவி கொடுக்க முடியுமா? எத்தனை மூத்த அமைச்சர்கள் உள்ளனர். அனுபவம் வாய்ந்த தலைவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை?. குடும்பக் கட்சி குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் உரிமையை கேட்கின்றனர். மறுவாழ்வு குறித்து அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசின் விலைவாசி உயர்வு, கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து மக்களிடம் கூறி வருகிறோம். கள்ளச்சாராயம் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு மெத்தனமாக செயல்படுகிறது. அரசு அறிக்கையோடு நின்று விடுகிறது, செயல்பாட்டில் இல்லை.

சேலம் மாவட்டத்தில் மூன்றாண்டுகளாக ஒரு திட்டம் கூட அரசு கொண்டுவரவில்லை. அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சி கடனில் தான் செல்கிறது. பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் தான் இந்த ஆட்சியை தூக்கி பிடித்துள்ளனர். இல்லை என்றால் ஆட்சி கவிழ்ந்து விடும்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement