#Onam பண்டிகை எதிரொலி - ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பூக்களின் விலை!
ஓணம் பண்டிகை மற்றும் ஆவணி கடைசி சுப முகூர்த்த தினம் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை அறுவடை திருவிழா எனவும் அழைக்கின்றனர். நாளை (செப். 15) ஓணம் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் தற்போது பூக்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றன. மேலும் தேவை அதிகமாக இருப்பதன் காரணமாக பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, புளியங்குடி உள்ளிட்ட மலர் சந்தைகளில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,500க்கும், பிச்சிப் பூ ரூ.1500-க்கும், கனகாம்பரம் பூ ரூ.1,200 ரூபாய்க்கும், விற்பனையாகி வரும் நிலையில், தேவையின் காரணமாக பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், “நாளை திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் அன்றைய தினம் ஆவணி மாத கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால், இன்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இன்று பகல் மற்றும் இரவில் ஓணம் சிறப்பு வியாபாரம் நடைபெறுவதால் நாளை இதர பூக்களின் விலை இன்னும் உயரலாம்” என தெரிவித்துள்ளனர்.