வாக்களிக்க ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்பும் நடிகர் விஜய்!
‘The Greatest of All Time’ படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வரும்நிலையில், நாளை தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் இன்றிரவு சென்னை வருகிறார்.
லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘The Greatest of All Time’ திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாகவும், அதில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சமீபத்தில் படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி, கேரளா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தநிலையில், தற்போது வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க, நடிகர் விஜய் ரஷ்யாவிலிருந்து இன்று இரவு சென்னை வருகிறார்.