இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி!
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும், புதிய வாழ்வாதாரங்களை உருவாக்கிடவும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வாயிலாக, மிக்ஜாம் மீட்புப் பணிகளுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி பல்வேறு கட்சிகளின் சார்பிலும் மேலும் கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்தார். அப்போது, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கட்சியின் சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமாத சம்பளத் தொகைக்கான காசோலையையும் வழங்கினார்.