For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை: 10 ஆண்டுகளில் 24,000 இதயவியல் சிகிச்சைகள்!

10:15 AM Apr 20, 2024 IST | Web Editor
ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை  10 ஆண்டுகளில் 24 000 இதயவியல் சிகிச்சைகள்
Advertisement

ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் இதய இடையீட்டு சிகிச்சை (கேத் லேப்) ஆய்வகத்தில் 24 ஆயிரம் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

சென்னை திருவல்லிக்கேணி அண்ணா சாலையில் அமைந்துள்ளது ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை.  இந்த மருத்துவமனையால் மக்கள் பலன் அடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்,  தமிழ்நாட்டின் வேறு எந்த மருத்துவமனையிலும் மேற்கொள்ளப்படாத மிக நுணுக்கமான சிகிச்சைகள் இங்கு மேற்கொள்ளப்படுவதாக அம்மருத்துவமனை இயக்குநர் விமலா மற்றும் தொடர்பு அதிகாரி மருத்துவர் ஆனந்தகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் பேசியதாவது;

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தற்போது இதயவியல்,  புற்றுநோயியல், நரம்பியல் உள்பட 10 உயர் சிறப்பு சிகிச்சைத் துறைகளும்,  6 சிறப்பு சிகிச்சைத் துறைகளும் உள்ளன. அதில், இதய இடையீட்டு சிகிச்சைப் பிரிவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 24 ஆயிரம் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணரும், பேராசிரியருமான டாக்டர் செசிலி மேரி மெஜல்லா மற்றும் துறைத் தலைவர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் இதனை சாத்தியமாக்கியுள்ளனர்.  அறுவை சிகிச்சையின்றி கால் அல்லது கை பகுதியில் சிறு துளையிட்டு ரத்த நாளங்கள் வழியாக இதய பாதிப்புகளை அவர்கள் சரி செய்துள்ளனர்.

சீரற்ற இதயத் துடிப்பு உள்ளவர்களுக்கும்,  குறிப்பாக இதயத் துடிப்பு அதிகமாக உள்ளவர்களுக்கும் எலெக்ட்ரிக் பிசியாலஜி ஸ்டடி மற்றும் அப்ளேசன் எனப்படும் சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன.  மொத்தம் 214 பேருக்கு அத்தகைய சிகிச்சைகள் வாயிலாக இதயத் துடிப்பு சீராக்கப்பட்டது.  மகா தமனி வால்வு மாற்ற சிகிச்சைகளானது மூன்று பேருக்கு ரத்த நாளங்களின் வழியாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதயக் குழாயில் உள்ள துவாரங்களை அறுவை சிகிச்சையின்றி அடைக்கும் 'ஏஎஸ்டி' எனப்படும் சிகிச்சை 231 பேருக்கு அளிக்கப்பட்டது.  இதில்,  அதிகளவில் இளம்பெண்கள் பயனடைந்துள்ளனர்.  அதேபோன்று, இதயத்தின் மிட்ரல் வால்வு சுருக்கத்தை விரிவடையச் செய்யும் 'பிடிஎம்சி' சிகிச்சை மூலம் 413 பேர் பலனடைந்துள்ளனர்.

முக்கியமாக மகாதமனி கிழிசலை சரி செய்யும் 'ஆர்எஸ்ஓவி' என்ற சிகிச்சையானது 7 பேருக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  73 வயதான விவசாயி ஒருவருக்கு அந்த சிகிச்சை மூலம் 'ஏடிஓ' என்ற உபகரணம் பொருத்தப்பட்டு அப்பிரச்னை சரி செய்யப்பட்டது. இதுபோன்ற சிகிச்சையானது 70 வயதைக் கடந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்படுவது உலகிலேயே இது தான் முதன்முறை என,  இதைப் பாராட்டி ஐரோப்பிய சுகாதார இதழ் கட்டுரையும் வெளியிட்டிருந்தது.

இதைத் தவிர பேஸ்மேக்கர் உள்ளிட்ட இதயத் துடிப்பை சீராக்கும் கருவிகளைப் பொருத்தும் சிகிச்சைகளையும் மருத்துவர்கள் திறம்பட மேற்கொண்டுள்ளனர் . ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு இது ஒரு மைல் கல் சாதனை”

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags :
Advertisement